தனியார் நிறுவனத்திற்கு நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்


தனியார் நிறுவனத்திற்கு நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 5:00 AM IST (Updated: 26 Feb 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்திற்கு நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குருபரப்பள்ளி, எண்ணெகொள், போடரஅள்ளி, புளியஞ்சேரி, கக்கன்புரம் உள்ளிட்ட 8 கிராமங்களில் 4 தலைமுறையாக வாழ்ந்து வரும் இவர்கள் நெல், தென்னை, மா, தேக்கு போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சிப்காட்டுக்கு சொந்தமான இடத்தில் வெளிநாட்டு கம்பெனியான டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்கு கூடுதல் இடம் தேவைப்படுவதால் சுற்று பகுதியில் உள்ள 250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டம்

இந்தநிலையில் சிப்காட்டின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ெபாதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 150 ஆண்டுகளாக இந்த பகுதியில் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறோம். மிட்டாதாரருக்கு சொந்தமான இந்த இடம் எங்களது அனுபவத்தில் உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டாவும் வாங்கி உள்ளனர். ஆனால் சிப்காட் நிறுவனம் மிட்டாதாரரிடம் இடத்தை கையகப்படுத்த அனுமதி பெற்று விட்டோம் என தெரிவிக்கின்றனர்.

எங்களது அனுபவத்தில் உள்ள இந்த இடத்தை கையகப்படுத்தி தனியாருக்கு வழங்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் கட்டமாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளோம். அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story