திருச்சுழி அருகே பயங்கரம்: டாஸ்மாக் கடை அருகே வாலிபர் கொலை - உறவினர்கள் மறியல்


திருச்சுழி அருகே பயங்கரம்: டாஸ்மாக் கடை அருகே வாலிபர் கொலை - உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:00 PM GMT (Updated: 25 Feb 2020 7:47 PM GMT)

திருச்சுழி அருகே டாஸ்மாக் கடை அருகே வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள திருமலைபுரத்தை சேர்ந்தவர் முத்து விஜயன். அவருடைய மகன் முத்துராமலிங்கம் (வயது27). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்று இருக்கிறார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் ஊருக்கு வெளியே அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே முத்துராமலிங்கம் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மட்டும் கிடந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்து அந்த பகுதியில் தேடியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஒரு இடத்தில் முத்துராமலிங்கம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியாபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முத்துராமலிங்கத்தின் உடலை பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான பின்னணி என்ன? என்பதை அறிய போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். முத்துராமலிங்கத்தின் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் பார்வையிட்டு, அங்கு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொலையாளிகளை கைது செய்யும் வரை முத்துராமலிங்கத்தின் உடலை பெற்றுச்செல்லமாட்டோம் என்று அவரது பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்தனர். அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே திரண்டு பந்தல்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சசிதரன்(திருச்சுழி), வெங்கடேசன்(அருப்புக்கோட்டை), இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மூக்கன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் நடந்த மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. 

Next Story