வருகிற ஏப்ரல் 2-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் விசுவ இந்து பரி‌‌ஷத் தேசிய துணை தலைவர் தகவல்


வருகிற ஏப்ரல் 2-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் விசுவ இந்து பரி‌‌ஷத் தேசிய துணை தலைவர் தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2020 8:53 PM GMT (Updated: 25 Feb 2020 8:53 PM GMT)

வருகிற ஏப்ரல் 2-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று விசுவ இந்து பரி‌‌ஷத் தேசிய துணை தலைவர் தெரிவித்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், விசுவ இந்து பரி‌‌ஷத் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேணுகோபால், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் சதானந்தம், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விசுவ இந்து பரி‌‌ஷத் தேசிய துணை தலைவர் பாலகிரு‌‌ஷ்ணநாயக் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில்

புண்ணிய பூமியான இந்தியாவுக்கு மதமாற்றம், பயங்கரவாதம், மேல்நாட்டு நுகர்வு கலாசாரம் ஆகியன மூலம் அபாயம் ஏற்படுகிறது. இதனை முறியடித்து நாட்டை பாதுகாக்க இந்துக்கள் ஜாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து பாரம்பரிய வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த 1528-ம் ஆண்டு பாபரால் இடிக்கப்பட்ட அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை மீட்க இதுவரை 76 முறை இந்துக்கள் ஆயுதம் ஏந்தி போர் நடத்தி 3 லட்சம் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். 77-வது முறை விசுவ இந்து பரி‌‌ஷத் ஆயுதம் இன்றி போர் நடத்தி தற்போது பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு வெற்றியை கண்டுள்ளது. கோவில் கட்ட சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய கல் தூண்கள் ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்டு தற்போது அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 15 பேர் கொண்ட அறக்கட்டளையை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அட்டானி ஜெனரல் பராசரன் இடம் பெற்றுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ராமநவமி அன்று தொடங்கும். அனைவரும் ராமபிரான் எடுத்துகாட்டிய தர்மநெறிகளை கடைபிடித்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், நகர தலைவர் மோடிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story