குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 10:11 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம்.

மணப்பாறை,

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தேசம் காப்போம் என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியில் நடைபெற்றது. புத்தாநத்தம்-மணப்பாறை சாலையில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கையில் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக பொதுக் கூட்டம் நடைபெற்ற திண்டுக்கல் சாலைக்கு வந்தனர்.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்துக்கு ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் தொல்.திருமாவளவன், ஜோதிமணி மற்றும் முகமதுஅபுபக்கர் எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் முபாரக் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசும் போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக அறவழியில் போராட வேண்டும். இது சாதாரண போராட்டம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது விடுதலை போர். மிக மோசமான பயங்கரவாதிகளின் கையில் இந்த நாடு சிக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நடைமுறைக்கு வந்தால், இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்பட 8 கோடி பேர் குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்படுவார்கள். அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் ஆதரிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டம் நிறைவேறி இருக்காது. என்றார்.

Next Story