தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சி தலைவராக தான் நீடிப்பார் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிக்கு சிவசேனா பதிலடி


தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சி தலைவராக தான் நீடிப்பார்   ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிக்கு சிவசேனா பதிலடி
x
தினத்தந்தி 25 Feb 2020 11:55 PM GMT (Updated: 25 Feb 2020 11:55 PM GMT)

தேவேந்திர பட்னாவிஸ் நீண்டகாலம் முன்னாள் முதல்-மந்திரியாக இருக்க மாட்டார் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தெரிவித்த கருத்துக்கு அவர் எதிர்க்கட்சி தலைவராக தான் நீடிப்பார் என்று சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் மோதல் காரணமாக பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. அதன்பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தது. பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் சிலகாலத்திற்கு மட்டும் தான் முன்னாள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப் பதாவது:-

எதிர்க்கட்சி தலைவராக தான் நீடிப்பார்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுரேஷ் பையாஜி நாக்பூரில் ஒரு வெற்று தகவலை தெரிவித்து உள்ளார். அதில் தேவேந்திர பட்னாவிஸ் நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்க மாட்டார். அவரது பெயரில் சேர்க்கப்பட்டு இருக்கும் ‘முன்னாள்' என்ற வார்த்தை விரைவில் மறைந்துவிடும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த கருத்து எதிர்க்கட்சியை (பா.ஜனதா) மனதளவில் மகிழ்ச்சியடைய செய்திருக்கலாம். ஆனால் மராட்டியத்தில் அப்படி எதுவும் நடக்காது. அவர் எதிர்க்கட்சி தலைவராக தான் நீடிப்பார். எனவே, தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியை செய்யலாம். இதை தான் நாங்கள் அவருக்கு பரிந்துரைக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story