சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கல்லால் தாக்கி கொலை


சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கல்லால் தாக்கி கொலை
x
தினத்தந்தி 26 Feb 2020 11:30 PM GMT (Updated: 26 Feb 2020 8:24 PM GMT)

சேலம் அருகே கல்லால் தாக்கி பெண் துப்புரவு பணியாளர் கொலை செய்யப்பட்டார். அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் ஒட்டன்காடு பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவருக்கும், கேரள மாநிலத்தை சேர்ந்த பீனா (வயது 38) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சபிதா(10), காவ்யா(9) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் ஞானசுந்தரம் இறந்து விட்டார். இதையடுத்து கணவர் வீட்டில் மாமியார், தனது குழந்தைகளுடன் பீனா வசித்து வந்தார். மேலும் பீனா, சேலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரின் மூத்த மகள் சபிதா ஏற்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படித்து வருகிறாள். மற்றொரு மகள் காவ்யா இளம்பிள்ளையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.

கல்லால் தாக்கி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற பீனா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் அவருடைய மாமியார் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதனிடையே நேற்று காலையில், அவர்களின் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒட்டன்காடு நீர்க்குட்டை அருகே தனியார் விவசாய தோட்டத்தில் சாலையோரமாக பீனா, தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் கிடைத்ததும், சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த பீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லில்லி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்கிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பீனா கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப் பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story