தாளவாடியில் கடையின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


தாளவாடியில் கடையின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 28 Feb 2020 12:00 AM GMT (Updated: 27 Feb 2020 5:16 PM GMT)

தாளவாடியில் கடையின் பூட்டை உடைத்து 60 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 38). இவர் தாளவாடியில் இருந்து ஒசூர் கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் நகை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடையை திறப்பதற்காக நேற்று காலை 9 மணி அளவில் ரங்கசாமி வந்து உள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் ஷட்டர் கதவு மூடிக்கிடந்தது.

60 பவுன் நகை திருட்டு

இதைத்தொடர்ந்து அவர் தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசாரின் முன்னிலையில் கடையின் ஷட்டர் கதவை திறந்து ரங்கசாமி உள்ளே சென்றார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் காணவில்லை. கடையில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 60 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. துணிக்கடையில் எந்தவித பொருட்களும் திருடு போகவில்லை.நள்ளிரவில் கடைக்கு வந்த மர்ம நபர்கள், ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகைகளை திருடி சென்று உள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில்...

இதுகுறித்த புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அங்குள்ள ரோட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கர்நாடக மாநில எல்லையில் தாளவாடி உள்ளது. எனவே கர்நாடக மாநில கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story