வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோபி கோர்ட்டு உத்தரவு


வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோபி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Feb 2020 5:00 AM IST (Updated: 28 Feb 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுச்சூரிபாளையத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 35). இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (50). 2 பேரும் கூலித்தொழிலாளர்கள். 2 பேருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

கொலை

இந்த நிலையில் கடந்த 27-3-2019 அன்று 2 பேருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அன்று இரவு புதுச்சூரியபாளையத்தில் உள்ள ஒரு கோவில் முன்பு கிருபாகரன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அம்மாசை, தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் கிருபாகரனை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கிருபாகரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மாசையை கைது செய்தனர்.

ஆயுள்தண்டனை

இதுதொடர்பான வழக்கு கோபியில் உள்ள 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு அளித்தார்.

அந்த தீர்ப்பில், ‘கிருபாகரனை கொலை செய்த அம்மாசைக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்ததுடன், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்,’ என்றும் உத்தரவிட்டார்.

Next Story