முறைகேடாக செயல்படுவதாக 3 ஜல்லி கிரஷர்களை பொதுமக்கள் முற்றுகை உடனடியாக மூட அதிகாரி உத்தரவு


முறைகேடாக செயல்படுவதாக 3 ஜல்லி கிரஷர்களை பொதுமக்கள் முற்றுகை உடனடியாக மூட அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 8:53 PM GMT)

ஓமலூர் அருகே முறைகேடாக இயங்குவதாக கூறி 3 ஜல்லி கிரஷர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த 3 கிரஷர்களை உடனடியாக மூட கனிமவளத்துறை தனி தாசில்தார் பெரியசாமி உத்தரவிட்டார்.

ஓமலூர்,

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகாக்களில் 20-க்கும் மேற்பட்ட ஜல்லி கிரஷர்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் மணல் உற்பத்தி செய்யும் கிரஷர்கள் என 25-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இதில் சில கிரஷர்களில் சட்டத்திற்கு புறம்பாக அதிக சத்தத்துடன் வெடி வைத்து தகர்ப்பதாகவும், இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் கிரஷருக்கு அனுமதி வாங்கி கொண்டு அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள பாறைகளை வெட்டி வருவதாகவும், சில கிரஷர்கள் அரசு விதிகளை கடைபிடிப்பது இல்லை எனவும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

புகார்

ஓமலூர் அருகே கோட்டமேட்டுபட்டியில் ஜெயமுருகன் புளூ மெட்டல்ஸ், வெங்கடேஷ்வரா புளூமெட்டல்ஸ், பண்ணாரி அம்மன் புளூமெட்டல்ஸ் மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் ஜெயமுருகன் புளூ மெட்டல்சில் அதிக சத்ததுடன் வெடி வைப்பதாகவும், இதனால் ஏற்படும் அதிர்வால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.

மேலும் வெங்கடேஷ்வரா புளூமெட்டல்ஸ் அனுமதியின்றி அரசு புறம்போக்கு இடத்தில் பாறைகளை வெட்டி எடுப்பதாகவும், பண்ணாரி அம்மன் புளூமெட்டல்ஸ் மற்றும் எம்.சாண்ட் நிறுவனத்தில் அனுமதி பெறாமல் எம்.சாண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறையினருக்கு கோட்டமேட்டுபட்டி பகுதியை சேர்ந்த குமார், ரமேஷ் ஆகியோர் புகார் அனுப்பினார்.

முற்றுகை

இதையடுத்து கடந்த 24-ந் தேதி கனிம வளத்துறை தனி தாசில்தார் பெரியசாமி இந்த பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் அந்த கிரஷர்கள் மீது எடுக்கப்படவில்லை என்று கூறி, நேற்று கோட்டமேட்டுபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த 3 ஜல்லி கிரஷர்களையும் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து ஓமலூர் தாசில்தார் குமரன், கனிம வளத்துறை தனி தாசில்தார் பெரியசாமி, தனி வருவாய் ஆய்வாளர் ஆனந்தமாதவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்து அறிக்கை தந்த பிறகு தான் அதிக சத்தம் எழுப்பும் கிரஷரில் பணிகள் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதே போல், கிரஷர் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தினை நில அளவீடு செய்த பின்பு தான் மற்றொரு கிரஷரை இயக்கவும், எம்.சாண்ட் உரிமம் இல்லாமல் இயக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்ட எம். சாண்ட் கிரஷர் உரிய ஆவணங்களை கொண்டு வந்து தரும் வரையிலும் அந்த கிரஷரை இயக்கவும் அதிகாரிகள் தடை விதித்தனர்.

மூட உத்தரவு

இந்த 3 கிரஷர்களையும் உடனடியாக மூட கனிமவளத்துறை தனி தாசில்தார் உத்தரவிட்டார். மேலும் மாவட்ட கலெக்டர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 3 கிரஷர்களையும் இயக்க கூடாது எனவும், இதனை கிராம நிர்வாக அலுவலர் கண்காணிக்க வேண்டும் எனவும் கனிம வளத்துறை தனி தாசில்தார் பெரியசாமி உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story