நெய்வேலியில், 2 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


நெய்வேலியில், 2 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Feb 2020 10:15 PM GMT (Updated: 28 Feb 2020 7:26 PM GMT)

நெய்வேலியில் 2 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்,

நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் கடந்த 6-ந்தேதி தாண்டவன்குப்பம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதி காந்திநகர் அண்ணாதுரை மகன் இளங்கோவன் (வயது 33) என்பவர் தனது வீட்டில் 9 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் அதே பகுதியில் கருங்குழி மேட்டுக்குப்பம் தெற்குதெருவை சேர்ந்த முத்துசாமி மகன் மீசைக்காரன் என்கிற உத்திராபதி (44) என்பவரும் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இளங்கோவன், உத்திராபதி ஆகிய 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக தலா 2 வழக்குகள் உள்ளன.

கஞ்சா வியாபாரிகளான 2 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்பேரில் இளங்கோவன், உத்திராபதி ஆகிய 2 பேரையும் நெய்வேலி தெர்மல் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல்களை சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

Next Story