ஓசூரில் பரபரப்பு சம்பவம் தொழில் அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


ஓசூரில் பரபரப்பு சம்பவம் தொழில் அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 March 2020 3:45 AM IST (Updated: 1 March 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தொழில் அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற ரவுடி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலை பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் தேவ் பாலமுருகன் (வயது 45). கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை 5 மணி அளவில் தேவ் பாலமுருகன் சித்தனப்பள்ளியில் இருந்து நல்லூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகில் தனது காரில் சொந்த வேலையாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், தேவ் பாலமுருகனின் காரை வழிமறித்து நிறுத்தினார்கள். பின்னர் காரில் இருந்த அவரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கினார்கள். அவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தேவ் பாலமுருகனை சுட்டான். அந்த குண்டு காரின் கண்ணாடியில் பட்டது.

போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த தேவ் பாலமுருகன் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற தேவ் பாலமுருகனுக்கு சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அவரை கெலமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி ஹரீஸ் தனது கூட்டாளிகளுடன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றது தெரிய வந்தது.

ஹரீஸ் ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு கெலமங்கலம் பஸ் நிலையத்தில் தொப்பி குமார் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் ஹரீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூரில் சொத்து பிரச்சினைக்காக தொழில் அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story