இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 2 March 2020 12:00 AM GMT (Updated: 1 March 2020 5:12 PM GMT)

இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது என சமய மாநாட்டில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் சவுந்தரராஜன் பேசினார்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

பின்னர் அவர் அங்கு நடந்த சமய மாநாட்டில் குத்துவிளக்கேற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி அனுமதி

தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற பின் வருகிற 6-ந் தேதி முதல் முறையாக சட்டசபையில் உரையாற்ற இருக்கிறேன். பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளேன். இப்போது ஒரு மாநிலத்தில் கவர்னராக உள்ளேன். மேதகு கவர்னர் என்று அழைப்பதை விட அன்பு சகோதரி என அழைப்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். கவர்னர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும்.

இந்த பதவியில் சும்மா இருந்து விட முடியாது. ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று தான் நான் இங்கு வந்து உள்ளேன். ஆண்டுதோறும் மண்டைக்காடு மாசி திருவிழாவில் நான் பங்கேற்பேன். அம்மன் அருளால் இப்போது உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். எனக்கு தலைமை பொறுப்பு என்பதை விட ஒரு கடைக்கோடி பக்தராக இருக்கவே விரும்புகிறேன்.

ஆன்மிகத்தை சார்ந்தது

நமது பண்பாடு, கலாசாரம் என்பது ஆன்மிகத்தை சார்ந்ததாக அமைந்துள்ளது. வீடுகளுக்கு முன் வேப்பமரம் வைக்க நமது முன்னோர்கள் கூறி உள்ளனர். அம்மை நோய் வந்தால் வேப்ப இலையை அரைத்து உடலில் தடவுவார்கள். வேப்பமரம் மிகப்பெரிய கிருமிநாசினி. அம்மனுக்கு நிகராக வேப்பமரத்தை வணங்க முன்னோர்கள் கூறி உள்ளனர். அதுபோன்ற கலாசாரம் தான் கொரோனா போன்ற கொடிய நோய்கள், நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. கோவில் பிரகாரத்தை நன்றாக சுற்றி வர வேண்டும் எனவும் கூறி உள்ளனர். கோவில் பிரகாரத்தை சுற்றி நடக்கும் போது உடல் வலிமை பெறுகிறது. உடல் மிகப்பெரிய கோவில் ஆகும். கோவில் போன்று உடலை பாதுகாக்க வேண்டும். தெலுங்கானா ராஜ்பவன், மக்கள் மன்றமாக மாறி வருவதாக அங்குள்ள ஊடகங்கள் எழுதுகின்றன. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது மிகப்பெரிய கடமை. தமிழகத்துக்கு வரும் போது, அன்னை வீட்டுக்கு வரும் ஒரு குழந்தை அடையும் மகிழ்ச்சியை நான் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story