மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; சீதனம் வழங்கி பிரசாதம் சாப்பிட்ட முஸ்லிம்கள்

மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாளவாடி மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சீதனம் வழங்கி கோவில் பிரசாதத்தை சாப்பிட்டனர்.
தாளவாடி,
தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகிலேயே முஸ்லிம்களின் பள்ளி வாசலும் உள்ளது. மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். அப்போது 60 அடி நீளம் குண்டம் கோவில் வளாகத்தில் அமைக்கப்படும். இந்த குண்டமானது பள்ளி வாசல் முன்பு செல்லும். பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டாலும் எந்த முஸ்லிம்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. குறிப்பாக தாளவாடியில் இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மாரியம்மன் கோவிலும், பள்ளிவாசலும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த கோவிலில் சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கோவில் முன்பு யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேதவிற்பன்னர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். முக்கிய விழாவான கும்பாபிஷேக விழா நேற்று மதியம் நடைபெற்றது. இதற்காக யாகசாலையில் இருந்து கோவில் கோபுரத்துக்கு புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு கலசத்துக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைெயாட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவிலில் விழா நடைபெறும்போது அந்த பகுதிைய சேர்ந்த முஸ்லிம்கள் இந்த கோவிலுக்கு சீதன பொருட்கள் வழங்குவது பாரம்பரியமாக பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பாராம்பரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு சீதனமாக சேலை, தேங்காய், பழம், இனிப்பு போன்ற பொருட்களை வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சீதன பொருட்கள் கொடுத்த முஸ்லிம்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முஸ்லிம்கள் கூறுகையில், ‘பாரம்பரியமாக அம்மனுக்கு எங்களால் வழங்கப்பட்டு வந்த சீதன பொருட்கள் வழங்கும் நடைமுறையை தற்போது பின்பற்ற தொடங்கி உள்ளோம்,’ என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவிலில் இருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றுவதாகவும் இருந்தது.
Related Tags :
Next Story