ஆலந்தலை பகுதியில் மீன்பிடிக்க இந்து மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தல்
ஆலந்தலை பகுதி கடலில் மீன்பிடிக்க இந்து மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது, தூத்துக்குடி மாதவர்காலனியை சேர்ந்த முனிசாமி என்பவர், ‘இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நெல்லை கோட்ட இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரா உள்ளிட்டவர்களுடன் வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தூத்துக்குடியை சேர்ந்த இந்து மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆலந்தலை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு படகில் வந்த ஆலந்தலை ஊர்கமிட்டியினர் இங்கு நீங்கள் மீன் பிடிக்க கூடாது என்று கூறி கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை தாக்கி, அவதூறாக பேசியுள்ளனர். மேலும் பத்திரத்தில் அவர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி அனுப்பி உள்ளனர். இதுபோன்று கடந்த ஆண்டுகளில் பல சம்பவங்கள் நடந்து உள்ளன. எனவே இந்து மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் பாசனக்கால்வாயில் இருந்து தற்போது தேவையில்லாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. விவசாயத்திற்கு தற்போது தண்ணீர் தேவை இல்லை. இதனால் திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது.
இதனை தடுத்து, தற்போதைய பிசான நெற்பயிர் அறுவடை பணிகள் முடிந்த உடன் கார்சாகுபடிக்கு தாமதமின்றி அனுமதி கொடுத்து சாகுபடி காலம் முடியும் வரை தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்க வேண்டும். அதே போல் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக இயக்க வேண்டும். ஏரல் தாமிரபரணி ஆற்று பாலத்தில் மின்விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ’தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வியாபாரம் செய்யும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமற்ற குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறி இருந்தனர்.
ஏரல் தாலுகா செதுக்குவாய்த்தான் குயவர்தெருவை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், ’இதுவரை எங்கள் ஊருக்கு அருகே உள்ள குளத்தில் இருந்து களிமண் எடுத்து மண்பாண்டம் செய்து வந்தோம். தற்போது அந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே நாங்கள் தொடர்ந்து மண்பாண்டம் செய்ய எங்கள் ஊருக்கு அருகே உள்ள தாமிரபரணி ஆற்று படுகையில் இருந்து களி மண் எடுக்க வனத்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தமிழர் விடுதலை கொற்றம் அமைப்பின் தலைவர் வியனரசு கொடுத்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக வரும் போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டால் அதற்கு நடிகர் ரஜினிகாந்த் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என கூறி இருந்தார்.
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடை சேர்ந்த வக்கீல் தொண்டன் சுப்பிரமணி நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் கழிப்பறை கோப்பை ஒன்றை கையில் வைத்து கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தார். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிவாசல் அருகே அரசு பொது கழிப்பறை இயங்கி வந்தது. தற்போது அந்த கழிப்பறை அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த இடத்தில் மீண்டும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
Related Tags :
Next Story