கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: குடிநீர் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்


கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: குடிநீர் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 9:33 PM GMT)

கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், குடிநீர் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிமம் இல்லாமல் செயல்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி கலெக்டர்கள், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து உரிமம் இல்லாத 30-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.

இதனால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

ஐகோர்ட்டு உத்தரவை நீதிபதிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக கேன் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் நேற்று சேலம் மாவட்ட மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர்கள் சங்கம், சேலம் மாவட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், குடிநீர் ஆலைகளின் உரிமையாளர்கள், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மண்டல செயலாளர் ஈஸ்வர், மாநில ஆலோசகர் சதாசிவம் ஆகியோர் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

வாழ்வாதாரம் கேள்விக்குறி

சேலம் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. இதில், 8 ஆலைகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன. இதனால் மீதமுள்ள 32 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இத்தொழிலில் சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு கேன் தண்ணீர் சப்ளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது சம்பந்தமாக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவில் அரசு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளார். எங்கள் தரப்பிலும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். குடிநீர் என்பது மக்களுக்கு இன்றியமையாது ஒன்றாகும்.

கட்டுப்பாடுகளை தளர்த்த

இதனால் குடிநீர் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த நீதிமன்றமும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் காரணமாக சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் மினி வேன், மினி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story