திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா


திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா
x
தினத்தந்தி 2 March 2020 11:30 PM GMT (Updated: 2 March 2020 11:33 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருச்செந்தூர், 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

4-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக வந்த திரளான பக்தர்கள் பு‌‌ஷ்ப காவடி, பறவை காவடி, தொட்டில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

5-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 10-ம் நாளான வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story