விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு நெல் அறுவடைக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை


விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு நெல் அறுவடைக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 4 March 2020 5:00 AM IST (Updated: 4 March 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் அருகே நெல் அறுவடைக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் கடைவீதி பகுதியில் வசிப்பவர் கண்ணன் (வயது 49). விவசாயி. இவரது தந்தை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆவார். கண்ணன் வயலில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் வயலில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை அவர் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள 2 பீரோக்கள், பாதுகாப்பு பெட்டகம் ஆகியவையும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. பீரோக்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தோடு, மூக்குத்திகள் உள்பட 10 பவுன் நகைகள், வெள்ளி குத்துவிளக்கு, ரூ.17 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நெல் அறுவடைக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதி பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story