கல்லக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 70 பேர் காயம்


கல்லக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 70 பேர் காயம்
x
தினத்தந்தி 3 March 2020 11:00 PM GMT (Updated: 3 March 2020 8:41 PM GMT)

கல்லக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 70 பேர் காயம் அடைந்தனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே மால்வாய் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெற்று கோவில் மாடுகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.

முன்னதாக அதிகாலை 5 மணி முதல் 221 மாடுபிடி வீரர்களுக்கும், 582 ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு அனைத்து வீரர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. லால்குடி ஆர்.டி.ஓ. ராமன், லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். மாலை 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

70 பேர் காயம்

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 582 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். வீரர்களின் பிடியில் பல காளைகள் சிக்கின. சில காளைகள் களத்தில் நின்று தன்னை நெருங்க விடாமல் வீரர்களை விரட்டி அடித்தன. மாடுகள் முட்டியதில் 70 வீரர்கள் காயமடைந்தனர்.

பரிசு

ஜல்லிக்கட்டில் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதிகஅளவில் காளைகளை பிடித்த அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் ஜெனட் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பிச்சைப்பிள்ளை தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர்.


Next Story