அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை ஆவணங்கள், வெளிநாட்டு காசோலைகள் சிக்கின


அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை ஆவணங்கள், வெளிநாட்டு காசோலைகள் சிக்கின
x
தினத்தந்தி 5 March 2020 12:15 AM GMT (Updated: 4 March 2020 8:41 PM GMT)

மணப்பாறையில், அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள், வெளிநாட்டு காசோலைகள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசித்து வருபவர் ஜெகநாதன்(வயது 62). எலக்ட்ரீசியனான இவர், கடந்த 9 ஆண்டுகளாக அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று காலை 6 மணியளவில் திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 8-க்கும் மேற்பட்டோர் 3 கார்களில் வந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜெகநாதன் வீட்டிற்குள் சென்ற வருமான வரி அதிகாரிகள் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், ஜெகநாதன், அவரது மகள் சுகன்யா, மருமகன் பிரபு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம், அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு உள்ளதா?, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணபரிவர்த்தனை குறித்து கேட்டறிந்தனர்.

காசோலைகள்

விசாரணையில், ஏழை-எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக கம்போடியா நாட்டில் உள்ள வங்கியில் கணக்கு உள்ளதும், அந்த வங்கி மூலம் காசோலைகள் பெற்று வந்ததும் தெரிய வந்தது. இதற்காக அவர் 4 முறைக்கு மேல் கம்போடியா சென்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, கம்போடியா நாட்டில் தொடங்கப்பட்டுள்ள வங்கி புத்தகம், காசோலைகள் மற்றும் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

இந்த சோதனை 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சோதனையை முடித்து விட்டு வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டனர். அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நம்ப மறுப்பு

வருமான வரி அதிகாரிகள் காலை 6 மணிக்கு ஜெகநாதன் வீட்டிற்கு சென்று சோதனை செய்ய வேண்டும் என்று கூறியபோது அவர்களை ஜெகநாதன் நம்ப மறுத்தார். இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்த பிறகே சோதனை மேற்கொள்ள அனுமதித்தார்.

Next Story