குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் 18-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் 18-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2020 5:30 AM IST (Updated: 6 March 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் 18-வது நாளாக முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதனை எதிர்த்து தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் கோட்டை பகுதியில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போராட்டம் நடத்தி வரும் நபர்களிடம் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சேலம் கோட்டை பகுதியில் போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்போவதாக நேற்று காலை தகவல் பரவியது.

சிறப்பு தீர்மானம்

இதுபற்றி அறிந்த முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மாலை வரையிலும் போலீசார் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இருப்பினும் முஸ்லிம் பெண்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

இதுகுறித்து முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றும் வரை சேலத்தில் போராட்டம் தொடரும். இங்கிருந்து யாரும் கலைந்து செல்லமாட்டார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தப்படவில்லை. அமைதியாகவும், அறவழியிலும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். எனவே, முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும், என்றார்.

Next Story