தஞ்சையில், பெண்கள் சாலை மறியல்; 131 பேர் கைது
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க கோரி தஞ்சையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 131 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
மத்தியஅரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க கோரியும் சி.ஐ.டி.யூ. அனைத்து சங்கங்களின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சை இர்வீன்பாலம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர் கல்யாணி தலைமை தாங்கினார். ஊர்வலத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாலதி, மாநகர செயலாளர் வசந்தி, மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, தையல் தொழிலாளர் சங்க நிர்வாகி வனரோஜா மற்றும் நிர்வாகிகள் கமலம், ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, மாவட்ட பொருளாளர் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு ஆகியோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் கோர்ட்டு சாலை வழியாக சென்று தாசில்தார் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், கட்டுமான நலவாரிய கமிட்டியின் பரிந்துரைப்படி தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சமும், விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். விதவை, முதியோர், கணவரால் கைவிடப்பட்டவர்கள், கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், நலவாரிய அலுவலகங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இயற்கை மரணம், விபத்து மரணம், திருமணம், மகப்பேறு உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு கலெக்டரின் உத்தரவுப்படி தினக்கூலி ரூ.385 வழங்க வேண்டும்.
ஏழை பெண் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமை சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் கைது செய்து மினிபஸ்களில் ஏற்றி சென்றனர். மொத்தம் 115 பெண்கள் உள்பட 131 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தினால் கோர்ட்டு சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story