மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டிய 2 பேர் கைது - போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டி வந்த 2 பேர் வாகன சோதனையினால் சிக்கினர்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். அப்போது அவர், எந்த ஆவணங்களும் இல்லை என்றும் மேலும் அது நண்பரின் மோட்டார் சைக்கிள் என்றும் கூறினார். சந்தேகமடைந்த போலீசார் ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளுமாறு மோட்டார் சைக்கிளை தங்கள் வசம் வைத்துக்கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, அது ஆட்டோ ஒன்றின் நம்பர் என்று தெரியவந்தது. மேலும் வண்டியின் என்ஜின் வரிசை எண்ணை சோதித்து பார்த்த போது அது எஸ்.எஸ்.காலனி பகுதியில் திருடு போன மோட்டார் சைக்கிள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி, அவர் மூலம் அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர். அதில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டியது தெரியவந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்ட சிவகுமார், விக்னேஸ்வரன்
ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அதனை பறிகொடுத்தவரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர், போலீஸ்காரர் ராஜபாண்டி ஆகிய இருவரையும் போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story