குன்னம் அருகே துணிகரம்: தாய்-மகளை தாக்கி 40 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


குன்னம் அருகே துணிகரம்: தாய்-மகளை தாக்கி 40 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 March 2020 12:00 AM GMT (Updated: 7 March 2020 5:12 PM GMT)

குன்னம் அருகே விவசாயி வீட்டில் புகுந்து தாய்-மகளை தாக்கி 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). விவசாயி. இவர் தனது மனைவி தேவகி (43) மற்றும் அவரது தாயார் சிவமாலை ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரனுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 3 பேரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, தேவகி மற்றும் சிவமாலை இருவரும் வீட்டின் ஹாலில் படுத்து தூங்கினர். ராஜேந்திரன் வீட்டு மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கினார்.

நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டில் பீரோ வைத்துள்ள அறையின் கதவு திறந்து மூடுகின்ற சத்தம் கேட்டுள்ளது. தேவகி சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் பீரோ வைத்து உள்ள அறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அவர்களது கையில் 2 துணிப்பை இருந்துள்ளது. உஷாரான தேவகி யாரது என அதட்டி கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால் தேவகியை அடித்துள்ளனர்.

40 பவுன் நகைகள் கொள்ளை

அப்போது சத்தம் கேட்டு தேவகியின் தாயார் சிவமாலையும் எழுந்து வந்தார். அவரையும் கொள்ளையர்கள் தாக்கினர். மேலும் கொள்ளையர்கள் இருவரும் கொலை செய்து விடுவோம் என அவர்களை மிரட்டி சிவமாலை அணிந்திருந்த மோதிரம், மூக்குத்தி மற்றும் 9 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு பின்வாசல் வழியாக தப்பி சென்றனர். அதைத்தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி தேவகி ஆகிய இருவரும் பீரோவை பார்த்துள்ளனர்.

அப்போது பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாலதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தேவகி குன்னம் போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story