மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Edappadi Palanisamy Speech at the Foundation Day of Mayiladuthurai

நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிக்கும் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த ஒரத்தூரில் 60.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.366 கோடியே 85 லட்சம் மதிப்பில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணியாளர்கள், மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய 21 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இங்கு 2020-2021-ம் கல்வி ஆண்டில் 150 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.


அடிக்கல் நாட்டு விழா

இந்த புதிய மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜே‌‌ஷ் வரவேற்றார்.

விழாவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

விவசாயிகள் நலனில் அக்கறை

நாகை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பாடல் பெற்ற தலங்களையும் கொண்டது. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறார்கள். விவசாயம், மீன்பிடி தொழில் ஆகியவை முதன்மை தொழிலாக கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள காவிரிபூம்பட்டினமான பூம்புகார் துறைமுகம் ஒரு காலத்தில் பன்னாட்டு வணிக தலமாக விளங்கியது. உப்பு சத்யாக்கிரக போராட்டம் நடைபெற்ற வேதாரண்யம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மும்மதத்தின் சங்கமாகவும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் நாகை மாவட்டம் விளங்கி வருகிறது. மீனவர்களின் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட இந்த அரசு, நாகை மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தனிச்சட்டம் இயற்றி உள்ளோம். இதன்படி இந்த பகுதியில் உருக்கு ஆலை, எக்கு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அணு ஆலை, தோல் பதனிடுதல், எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் புதிதாக தொடங்க முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை முக்கியமாக கொண்ட இந்த பகுதியில் பல கோடி மதிப்பிலான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது.

மீன்பிடி துறைமுகம்

மீன்பிடி தொழிலை முக்கியமாக கொண்ட இந்த பகுதியில் பல கோடி மதிப்பிலான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது. மீன்பிடி தடைகாலம், குறைவு காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறோம். நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க உள்ளோம். இதனால் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, பு‌‌ஷ்பவனம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மருத்துவக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 11 மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி தமிழக அரசு சரித்திர சாதனையை படைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு. அதை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

தேசிய விருது

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் தேசிய விருது பெற்று வருகிறது. இதேபோல் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 10 அரசு மருத்துவமனையில் மையம் அமைத்து புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வருகிறோம்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் இதை கொண்டு வந்துள்ளதன் மூலம் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் நிலையை உருவாக்கி உள்ளோம். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் ஏழைகளுக்கு கட்டணம் இல்லமல் சிகிச்சை அளித்து குணப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம்.

13 ஆயிரம் டாக்டர்கள்

கிராமப்புற மக்களுக்கு அரசின் சுகாதார சேவை தங்கு தடையின்றி கிடைக்க புதிதாக 254 ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்கி உள்ளோம். பல்வேறு இடங்களில் சுகாதார நிலையங்களை 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி உள்ளோம். புதிதாக டாக்டர்களை நியமித்து அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் ரூ.120 கோடி மதிப்பில் மாநில அளவிலான புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

ரூ.59 கோடி மதிப்பில் மதுரை, கோவை, தஞ்சை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் 4 புற்று நோய் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடைக்கோடி மக்கள் அனைவருக்கும் அரசின் மருத்துவசேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 8 ஆண்டுகளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மருத்துவமனையில் காலி இடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம்.

ரூ.428 கோடியில் கதவணை

பருவகாலத்தில் பெய்யும் மழை நீர், மேட்டூர் அணையில் இருந்து உபரியாக வரும்போது அது கடலில் வீணாக கலக்கிறது. உபரி நீர் கடலில் கலப்பதை சேமித்து வைக்க வேண்டும் என்று விவசாயிகள், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.428 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 கிராமங்கள் பயன்பெறும். 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

நான் இங்கு வருவதற்கு முன்பு அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏக்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கு வரும் போதும் அந்த மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்கிறீர்கள். எனவே எங்கள்(நாகை) மாவட்டத்திற்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாங்கள் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். அதன்படி அரசால் நிறைவேற்றக்கூடிய கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

மயிலாடுதுறை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வைத்த இந்த கோரிக்கை விரைவாக, துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு ஏழை, எளிய மக்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது.

கல்வித்துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை என அனைத்திலும் தேசிய அளவில் விருதுகளை பெற்று வருகிறது. அந்த அளவுக்கு அமைச்சர்கள் இரவு, பகல் பாராது பணியாற்றி விருதுகளை பெற்று வருகிறார்கள்.

தூண்டுகோல்

தமிழக அரசுக்கு, மத்திய அரசு நல்ஆளுமை திறன் விருது வழங்கி தர வரிசையில் முதலிடம் கொடுத்து உள்ளனர். அந்த விருது கொடுத்தவரை அழைத்து வாருங்கள், நான் அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்றால் எவ்வளவு க‌‌ஷ்டமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி ஆளுமை திறனில் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளோம் என்றால் எங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை, குறை சொல்லாமல் இருக்கலாம் அல்லவா?.

எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், எரியும் விளக்கை தூண்டி விட வேண்டும். அதாவது ஒரு அரசுக்கு தூண்டுகோலாக இருப்பது தான் நல்ல எதிர்க்கட்சி தலைவர். அப்போது தான் அரசு இன்னும் சிறப்புடன் செயல்படும். ஆனால் சிறந்த அரசை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். இந்தியாவிலேயே முதலிடம் பிடிப்பது என்பது சாதாரண வி‌‌ஷயம் அல்ல. அறிஞர் பெருமக்கள் எங்களை பாராட்டுகிறார்கள். மக்கள் எங்களை பாராட்டுகிறார்கள். தமிழக அரசு ஆளுமை திறனில் முதலிடம் பெற காரணமாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவு அளித்து வரும் மக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காவிரி-கோதாவரி இணைப்பு

சில காலங்களில் பருவமழை பொய்த்து விடுகிறது. அப்போது மேட்டூர் அணையில் நீர் குறைவாக இருப்பதால் குறித்த காலத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்படுகிறது. வருகிற காலத்தில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க காவிரி-கோதாவரியை இணைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பிரதமர், மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோதாவரி ஆறு ஆந்திரா, தெலுங்கானா வழியாக தமிழகம் வர வேண்டும். இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரிகளுடனும் பேசி உள்ளோம். அவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று கருகிறேன். அந்த ஒத்துழைப்பு நிறைவேற்றப்பட்டால் நமது நீண்ட கால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். எல்லா காலத்திலும் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் கிடைக்கும். டெல்டா பாசன மக்களுக்கு குறித்த காலத்தில் தண்ணீர் கிடைக்க காவிரி-கோதாவரி இணைப்பை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நீர் மேலாண்மை திட்டம்

விவசாயத்தை நம்பித்தான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள், அவர்களின் க‌‌ஷ்டங்களை தீர்க்க நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பருவகாலத்தில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் ஆங்காங்கே தேக்கி வைக்க நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கலெக்டர் பிரவீன் நாயர் நன்றி கூறினார்.

13 புதிய திட்டங்கள்

விழாவில் ரூ.28 கோடி மதிப்பில் 13 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.343 கோடியே 84 லட்சம் மதிப்பில் முடிவடைந்த 66 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த இடத்தில் மரக்கன்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நட்டார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள், நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரியும், அவரது மகனும் உயிரிழந்த சம்பவம்பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
2. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் திருச்சி எடப்பாடி பழனிசாமி பாராட்டு
கொரோனா தடுப்பு பணியில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
3. கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் எடப்பாடி பழனிசாமி தகவல்
கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது எடப்பாடி பழனிசாமி பாராட்டு
கொரோனா தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.