எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளில் சிறந்த மாணவ-மாணவிகள் 30 பேருக்கு காமராஜர் விருது


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளில் சிறந்த மாணவ-மாணவிகள் 30 பேருக்கு காமராஜர் விருது
x
தினத்தந்தி 7 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-08T04:04:35+05:30)

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் சிறந்த மாணவ-மாணவிகள் 30 பேருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. இதனை முதன்மை கல்வி அதிகாரி ராமன் வழங்கினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 2018-2019-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று, ஒழுக்கம், ஆசிரியருக்கு கீழ் படிதல் போன்ற கல்வி இணைச்செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகள் 30 பேர் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.எல்.சி.யில் 15 மாணவர்களும், பிளஸ்-2 வகுப்பில் 15 மாணவர்களும் ஆவர்.

மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில் மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

காசோலை

அப்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் 30 பேர் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகளுடன் வந்து முதன்மைக்கல்வி அதிகாரியிடம் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

விருது பெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

சிறந்த பள்ளிகள்

இதேபோல் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அரசு பள்ளிகளுக்கும் காமராஜர் விருது வழங்கப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட திக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட காமராஜர் விருதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிராங்கிளின் ஜேக்கப் பெற்றுக் கொண்டார். காமராஜர் விருதாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. அந்த பள்ளிக்கு ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையுடன் காமராஜர் விருது வழங்கப்பட்டது. இதனை இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் முருகன், பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.எல்.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story