கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள் - அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரியத்தொடங்கி உள்ளனர்.
வேலூர்,
சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்து ஈரான் மற்றும் இத்தாலி நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும் டெல்லி, தெலுங்கானா பகுதிளை சேர்ந்தவர்கள், இத்தாலியில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தற்போது ஓமனில் இருந்து திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திலும் சீனாவுக்கு சென்று திரும்பியவர்கள், சீனாவில் இருந்து வந்தவர்கள் என 29 பேர் தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் இத்தாலியை சேர்ந்த 2 பேர் தங்கள் நாட்டுக்கு சென்றுவிட்டு கடந்த 2-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் பேரணாம்பட்டு பகுதியில் தனித்தனி வீடுகளில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், வேலூர் மாவட்டத்தில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் சில டாக்டர்கள் வழக்கமாக முகக்கவசம் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து டாக்டர்களும் முகக்கவசம் அணிந்து சிகிச்சையளிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் அனைத்து மருத்துவ பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிபுரிந்து வருகிறார்கள். ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் பயணிகள் பலர் முகக்கவசம் அணிந்து செல்வதையும் காணமுடிந்தது.
Related Tags :
Next Story