வேலூர் அருகே, ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி - டிரைவர் உள்பட 4 பேர் காயம்


வேலூர் அருகே, ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி - டிரைவர் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-08T23:58:03+05:30)

வேலூர் அருகே ஆட்டோமீது கன்டெய்னர் லாரி மேதியதில் ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

வேலூர்,

ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் நேற்று காலையில் 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி ஆட்டோவை ஓட்டிவந்தார். வேலூரை அடுத்த பெருமுகை அருகே வந்தபோது பின்னால் ஒரு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது.

திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற ஆட்டோமீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து, அதில் பயணம் செய்த 4 பயணிகள் மற்றும் டிரைவர் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.

அவர்களில் மேல்விஷாரம் ஹாஜிபேட்டையை சேர்ந்த நவீஸ் அகமது (வயது22) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான நவீஸ் அகமது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.

Next Story