குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் - திருமுருகன் காந்தி பங்கேற்றார்


குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் - திருமுருகன் காந்தி பங்கேற்றார்
x
தினத்தந்தி 8 March 2020 10:15 PM GMT (Updated: 8 March 2020 6:43 PM GMT)

ராமநாதபுரத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தில் திருமுருகன் காந்தி கலந்து கொண்டார்.

ராமநாதபுரம்,

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் இந்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் மக்கள் தன்னெழுச்சி போராட்டக்குழு சார்பில் பாம்பூரணி பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போராட்டத்தில் மே 17 இயக்க தலைவர் திரு முருகன் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் அடக்குமுறையை கையாண்டதால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாகி விட்டது.

ஒரே ஒரு இடத்தில் நடந்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருமை போலீசாரையே சாரும். காவல்துறையை பயன்படுத்தி போராட்டங்களை அடக்கி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது.

ஆனால் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகளே தடுமாறி நிற்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மக்கள் விரோத சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இது இந்துக்களுக்கும் எதிரானது. கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது. எனவே ஒட்டுமொத்தமாக அனைவரும் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story