இந்திய செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டு விழா: மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


இந்திய செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டு விழா: மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 March 2020 10:30 PM GMT (Updated: 8 March 2020 9:20 PM GMT)

இந்திய செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டு விழாவையொட்டி மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் கிளை அலுவலகம் அருகே மக்கள் சேவையில் 100 ஆண்டுகள் (1920-2020) என்ற தலைப்பில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி மோட்டார்சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

செஞ்சிலுவை சங்கம் 1863-ம் ஆண்டு ஜெனிவாவில் தொடங்கப்பட்டது. இது படிப்படியாக பல்வேறு நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 1920-ம் ஆண்டு இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் இந்த ஊர்வலம் கிரு‌‌ஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு சான்றிதழ்

இந்த ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட எல்லையில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் பிரபாகர், வட்ட அளவில் சிறப்பாக செயல்படும் இந்திய செஞ்சிலுவை சங்கம் பிரதிநிதிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையொட்டி மயிலாட்டம் கோலாட்டம், பொய்கால் குதிரை, கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரெட்கிராஸ் நூற்றாண்டு விளக்கும் வாகன கண்காட்சி இடம் பெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட துணை தலைவர்கள் ரங்கநாதன், கொங்கரசன், முருகேசன், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணை பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜன், கோவிந்தராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story