அதிக வருவாய் பெற காய்கறி-தர்பூசணி சாகுபடி செய்யலாம் அதிகாரி அறிவுறுத்தல்


அதிக வருவாய் பெற காய்கறி-தர்பூசணி சாகுபடி செய்யலாம் அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 March 2020 10:30 PM GMT (Updated: 9 March 2020 7:29 PM GMT)

அதிக வருவாய் பெற காய்கறி-தர்பூசணி சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 9-வது அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவஹர்லால் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு பிறகு தை மற்றும் மாசி பட்டங்களில் காய்கறி பயிர்கள், வெள்ளரி, தர்பூசணி சாகுபடியை செய்து அதிக வருவாய் பெறலாம். இந்த பயிர்களை சாகுபடி செய்ய தண்ணீரின் தேவை மிகவும் குறைவு. ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமாகவும் அதிக வருவாய் பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டறிக்கை

கூட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், அறிவியல் ஆலோசனைக்குழுவின் செயல் பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். வேளாண்மை கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன், ஐதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிரு‌‌ஷ்ணன் கலந்து கொண்டு நெல் உயர் விைளச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற புத்தகத்தையும், 7 கையேடுகளையும் வெளியிட்டார். இதில் தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமஜெயம், நபார்டு வளர்ச்சி வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாட்ரிக் ஜாஸ்பர், கால்நடை பல்கலைக்கழக உழவர் பயிற்சி மைய தலைவர் கதிர்செல்வன், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சுரே‌‌ஷ், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் எழிலரசன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கண்காட்சி

கூட்டத்தையொட்டி நெல், சிறுதானியங்கள் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் ராஜா.ரமே‌‌ஷ், சரவணன் மற்றும் பயிற்சி உதவியாளர்கள், திட்ட உதவியாளர்கள், ஆராய்சியாளர்கள் செய்து இருந்தனர். முடிவில் மண்ணியல் துறை உதவி பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.

Next Story