தஞ்சை வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது


தஞ்சை வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
x
தினத்தந்தி 10 March 2020 12:30 AM GMT (Updated: 9 March 2020 7:43 PM GMT)

தஞ்சை வியாபாரியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

தஞ்சாவூரில் மளிகை கடை நடத்தி வருபவர் பரணிதரன். இவர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மளிகை கடைகளுக்கு சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாகனம் மூலம் வினியோகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பரணிதரன் வினியோகம் செய்யும் எண்ணெய் தரமற்று இருப்பதாக கூறி திருமானூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அழகுவேல்(வயது 45) சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றை பதிந்துள்ளார். அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என பரணிதரனிடம் அழகுவேல் கேட்டுள்ளார்.

கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத பரணிதரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகியுள்ளார். இதனையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று பரணிதரன், திருமானூர்-திருச்சி சாலையில் ஒரு இடத்தில் வைத்து அழகுவேலிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அழகுவேலை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருமானூர் மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story