நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 March 2020 5:00 AM IST (Updated: 10 March 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். நெல்லை உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சசி ரேகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை அருகே உள்ள மானூர் மேலஇலந்தைகுளத்தை சேர்ந்த பெண்கள் நேற்று தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள 600 வீடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். அப்போது பஞ்சாயத்தில் இருந்து ரூ.40 ஆயிரமும், உங்கள் பணம் ரூ.9 ஆயிரமும் போட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்படும் என்று அங்குள்ள அதிகாரி தெரிவித்தார். இதை நம்பி நாங்கள் ரூ.9 ஆயிரத்தை மக்களிடம் வசூலித்து கொடுத்தோம். தற்போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்காமல் வேறு பகுதிக்கு தண்ணீர் வழங்க முயற்சி செய்கிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவேண்டும். எங்கள் பகுதியில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்யவேண்டும். தெருவிளக்கு எரிவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை சந்திப்பில் உள்ள தாட்கோ கட்டிடம் சில காலம் நெல்லை தாலுகா அலுவலகமாக செயல்பட்டது. அதன் பிறகு சமுதாய நலக்கூடமாக இருந்து திருமணத்திற்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வந்தது. அந்த கட்டிடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் முட்செடிகள், புதர் மண்டி கிடக்கிறது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை அருகே உள்ள பாலாமடையை சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் கொடுத்த மனுவில், எனது கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டு எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் சொத்து தராமல் கொடுமைப்படுத்துவதாக கூறி உள்ளார். கொரடாச்சேரியை ஆறுமுகம் என்பவர், வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதாக கூறி தன்னிடம் ரூ.3¾ லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு கொடுத்தார்.

மகளிர் தின விழா

இதைத்தொடர்ந்து மனுக்கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு கலெக்டர் ‌ஷில்பா சென்று குறைகளை கேட்டுக்கொண்டு உடனடியாக தீர்த்து வைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

கூட்டத்தில் பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 17 பேருக்கு ஆக்கிரமிப்பு வரன்முறை பட்டாக்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் செயல்படும் போ‌‌ஷன் பக்வாடா உறுதிமொழி ஏற்கப்பட்டது. மகளிர் தின விழா கலெக்டர் ‌ஷில்பா தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Next Story