கர்நாடகத்திலும் நுழைந்தது அமெரிக்காவில் இருந்து திரும்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை


கர்நாடகத்திலும் நுழைந்தது   அமெரிக்காவில் இருந்து திரும்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு   5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
x
தினத்தந்தி 10 March 2020 5:29 AM IST (Updated: 10 March 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் கர்நாடகத்திலும் பரவியது. அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

பெங்களூரு,

அண்டை நாடான சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்

இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நோயால் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் நேற்று வரை 43 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் கொரோனா வைரசை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டவர்கள் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையின் ஆலோசனைப்படி பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு மற்றும் பெங்களூரு புறநகர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளுக்கு காலவரையறை இன்றி விடுமுறை அறிவித்து கர்நாடக அரசு நேற்று முன்தினம் இரவு அறிவித்தது.

மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை மழலையர் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று அரசு, தனியார் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒரு சில மழலையர் பள்ளிகளுக்கு வந்த சிறுவர்-சிறுமிகளும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று காலை பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர்.

கர்நாடகத்தில் ஒருவர் பாதிப்பு

இதற்கு பதில் அளித்த கர்நாடக மருத்துவ கல்வித் துறை மந்திரி சுதாகர், கர்நாடகத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், கொரோனா வைரசை தடுக்க அரசு அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், கர்நாடகத்தில் கொரோனா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது-

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

அமெரிக்காவில் இருந்து 40 வயது நிரம்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் துபாய் வழியாக பெங்களூருவுக்கு கடந்த 1-ந் தேதி காலை 8.50 மணிக்கு வந்தார். அவர் கடந்த 4-ந் தேதி காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். புறநோயாளிகள் பிரிவில் அவர் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற்று சென்றார். ஆனால் மறுநாள் அவருக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்தது. மீண்டும் அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அவரது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியானது. இதையடுத்து பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய அரசுக்கு கடிதம்

அவருடன் வந்த அவரது மனைவி, குழந்தை, கார் ஓட்டுனர் ஆகியோர் நன்றாக உடல்நலத்துடன் உள்ளனர். ஆயினும் அவர்களையும் தனிமைப்படுத்தி ஆஸ்பத்திரியில் அனுமதித்து கண்காணித்து வருகிறோம்.

மேலும் அந்த நபர் வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் ஒருவருக்கு தாக்கியது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளோம். பொதுமக்கள் யாரும் பீதியடைய தேைவ இல்லை. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கர்நாடக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

5-ம் வகுப்பு வரை விடுமுறை

இதற்கிடையே பெங்களூரு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு- தனியார் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறுகையில், “கொரோனா வைரசை தடுக்கும் வகையில் பெங்களூருவில் மழலையர் பள்ளிகளுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு- தனியார் பள்ளிகளுக்கு நாளை (இன்று) முதல் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ளோம். 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவாக தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

பெரும் பரபரப்பு

கர்நாடகத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவலால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story