கன்னியாகுமரியில் பரபரப்பு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது; போலீஸ்காரர் பரிதாப சாவு இளம்பெண் உயிர் ஊசல்


கன்னியாகுமரியில் பரபரப்பு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது; போலீஸ்காரர் பரிதாப சாவு இளம்பெண் உயிர் ஊசல்
x
தினத்தந்தி 11 March 2020 6:00 AM IST (Updated: 10 March 2020 10:18 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது. இதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். இளம்பெண் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். அப்போது வள்ளங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் ஆண் ஒருவர் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அந்த பிணத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஆணின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை பார்த்த போது, அவர் கேரள மாநிலம் கொல்லம் தட்டாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் போஸ் (வயது 38) என்பதும், காசனூர் போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரது செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் ஒரு இளம்பெண்ணுடன் கன்னியாகுமரி வந்ததும், ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

உயிருக்கு போராட்டம்

உடனே போலீசார் அந்த விடுதிக்கு சென்றனர். போஸ், இளம்பெண்ணுடன் தங்கி இருந்த அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. அறையின் உள்ளே இருந்து ஒரு பெண்ணின் அழுகை சத்தம் கேட்டது. உடனே போலீசார் அந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு பெண் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி தகவல்கள்

விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

போலீஸ்காரர் போஸ் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்த பெண்ணின் பெயர் சுப்ரியா. இவர் கேரள மாநிலம் காசனூர் பகுதியைச் சேர்ந்தவர். போஸ், சுப்ரியா இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது இருவரும் காதலித்து வந்தனர்.

இதற்கிடையே சுப்ரியாவுக்கு அசோக் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுப்ரியா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பிறகு போஸ், வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

தனிமையில் உல்லாசம்

இதற்கிடையே சுப்ரியாவின் கணவர் அசோக் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதன்பிறகு சுப்ரியா, போஸ் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. பழைய காதலர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு வந்துள்ளது. சுப்ரியாவின் கணவர் அசோக் இதனை கண்டித்தார்.

தனது கல்லூரி காதலை மறக்க முடியாத சுப்ரியா கணவர் அசோக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட சுப்ரியாவுடன் அதிக நேரத்தை போஸ் செலவிட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்திலும் தகராறு ஏற்பட்டது. உடனே கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று வாழலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் கோவை சென்றுள்ளனர்.

சாவில் இணைய முடிவு

இதற்கிடையே இருவரையும் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் சார்பில் காசனூர் போலீசில் தனித்தனியாக புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ் மற்றும் சுப்ரியாவை தேடி வந்தனர். போஸ் போலீஸ்காரர் என்பதால் விசாரணை துரிதமாக நடந்தது. கள்ளக்காதல் ஜோடியின் செல்போன் எண் சிக்னலை வைத்து கேரள போலீசார் கோவை வந்தனர்.

இதனை அறிந்த போஸ் மற்றும் சுப்ரியா அங்கிருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்களை தேடி கேரள போலீசார் கன்னியாகுமரிக்கு வந்துள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் மனம் உடைந்த போஸ் மற்றும் சுப்ரியா இருவரும் போலீசார் நம்மை பிரித்து விடுவார்கள். எனவே சாவில் இருவரும் இணைந்து விடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தனர்.

விஷம் குடித்தனர்

இருவரும் விடுதி அறையில் ஒன்றாக அமர்ந்து விஷம் குடித்தனர். விஷம் குடித்த சிறிது நேரத்தில் போஸ் வாந்தி எடுத்துள்ளார். விடுதி ஊழியர்களுக்கு விஷம் குடித்த விவரம் தெரிந்து விடும் என நினைத்து அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவர், வாவத்துறை பகுதியில் சென்ற போது வள்ளங்களுக்கு இடையே மயங்கி விழுந்த அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

சுப்ரியா விடுதியில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story