திருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை தொடக்கம்


திருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 11 March 2020 5:30 AM IST (Updated: 11 March 2020 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

திருவாரூர்,

பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைத்திடும் வகையில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் மூலமாக ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல பகுதிகளில் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வரை மின்சார ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் கடலூரில் இருந்து திருவாரூர் வரையில் மின்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.

சோதனை ஓட்டம்

இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் மூலம் மின் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

இதை கொண்டாடும் விதமாக திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில், நிர்வாகிகள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

இதுகுறித்து ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கூறுகையில், ‘தென்னக ரெயில்வே மாசில்லா ரெயில்வே என்ற குறிக்கோளுக்கு ஏற்ப டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின்களை பயன்படுத்தி ரெயில்களை இயக்குவதை வரவேற்கிறோம். காரைக்கால்-திருச்சி, திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தை மின் இரட்டை வழி பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.

முதன்மை பராமரிப்பு நிலையம்

திருவாரூரில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகையான ரெயில்களையும் மின்சார ரெயிலாக மாற்றம் செய்ய வேண்டும். திருவாரூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களுக்கான முதன்மை பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரெயில் சேவையை விரைவாக தொடங்க வேண்டும். தொலை தூரங்களுக்கு வாராந்திர ரெயில்கள் இயக்க வேண்டும்’ என கூறினார்.

Next Story