அமெரிக்க என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கர்நாடக சுகாதாரத்துறை தகவல்


அமெரிக்க என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்களில்   மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி   கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 11 March 2020 5:26 AM IST (Updated: 11 March 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2 பேருக்கு கொரோனா அறிகுறி

கர்நாடகத்தில் அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 47 வயது பெண், 13 வயது சிறுமி மற்றும் அவரது 50 வயது நண்பர் என 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருமே இந்தியர்கள்.

அவர்களுடன் 2,666 பேர் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். இதில் மேலும் 2 பேருக்கு அந்த வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை தனிமைபடுத்தி வைத்துள்ளோம். அவர்களின் ரத்தம், சளி மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1,048 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அவர்களில் 275 பேர் 28 நாட்கள் கண்காணிப்பு காலத்தை நிறைவு செய்துள்ளனர். மீதமுள்ள 760 பேர் தொடர்ந்து அவரவர்களின் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 64 ஆயிரத்து 343 பேரும், மங்களூரு விமான நிலையத்தில் 25 ஆயிரத்து 440 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இது மட்டுமின்றி மங்களூரு, கார்வார் ஆகிய துறைமுகங்களில் 5 ஆயிரத்து 368 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மென்பொருள் உற்பத்தி...

மைசூரு மருத்துவ கல்லூரி, ஹாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சிவமொக்கா மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் ெகாரோனா வைரஸ் நோயை கண்டறியும் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அவை செயல்பாட்டுக்கு வரும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவந்த ஊழியர்களின் விவரங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story