வேறு பெண்ணை மணக்க விவாகரத்து கொடுக்கும்படியும் தொல்லை அழகாக இல்லாததால் மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய கொடூரம் தனியார் நிறுவன ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு


வேறு பெண்ணை மணக்க விவாகரத்து கொடுக்கும்படியும் தொல்லை   அழகாக இல்லாததால் மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய கொடூரம்   தனியார் நிறுவன ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 March 2020 12:04 AM GMT (Updated: 2020-03-11T05:34:17+05:30)

மனைவி அழகாக இல்லாதததால், அவர் மீது ஹெல்மெட்டால் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், வேறு பெண்ணை மணக்க விவாகரத்து கொடுக்கும்படியும் தனியார் நிறுவன ஊழியர் தொல்லை கொடுத்திருந்தார். தலைமறைவாகிவிட்ட அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு விஜயநகர் அருகே மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). இவரது மனைவி விஜயலட்சுமி (32). இந்த தம்பதிக்கு கடந்த ஒரு ஆண்டு்க்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. சசிகுமார் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான 6 மாதம் சசிகுமாரும், விஜயலட்சுமியும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு, தனது மனைவி விஜயலட்சுமியிடம், நீ பார்க்க அழகாக இல்லை, அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்று சசிகுமார் கூறியுள்ளார்.

மேலும் விஜயலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்தததுடன் இரும்பு கம்பியால் சசிகுமார் தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வேறு திருமணம் செய்வதற்கு வசதியாக விவாகரத்து கொடுக்கும்படியும் விஜயலட்சுமிக்கு சசிகுமார் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சசிகுமாருடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டுக்கு விஜயலட்சுமி சென்றுள்ளார். பின்னர் விஜயலட்சுமியின் பெற்றோர், குடும்பத்தினர் சசிகுமாரை சமாதானப்படுத்தி உள்ளனர். பின்னர் தங்களது மகளை சசிகுமாருடன் சேர்ந்து வாழ பெற்றோர் அனுப்பியுள்ளனர்.

கொடூர தாக்குதல்

ஆனாலும் கடந்த சில நாட்களாக விஜயலட்சுமி அழகாக இல்லை என்று கூறி சசிகுமார் சண்டை போட்டதுடன், அவரை அடித்து உதைத்து தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர் மீது திராவகம் வீசிவிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் சசிகுமார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்காக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி கூறி, விஜயலட்சுமியை ஹெல்மெட்டால் சசிகுமார் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவர் தலையில் பலத்தகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து விஜயநகர் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது விஜயலட்சுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட சசிகுமாரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story