கர்நாடகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கலெக்டர்கள் தலைமையில் குழு


கர்நாடகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு   சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
x
தினத்தந்தி 11 March 2020 5:50 AM IST (Updated: 11 March 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதையொட்டி சுகாதார துறை அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து இருப்பதாக தெரிவித்தார்.

பெங்களூரு,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

இந்த வைரசுக்கு இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழலையர் பள்ளி களுக்கு கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேர் பாதிப்பு

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு திரும்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கர்நாடகத்திற்குள்ளும் கொரோனா வைரஸ் நுழைந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

இதைதொடர்ந்து 5-ம் வகுப்பு வரை அரசு-தனியார் பள்ளிகளுக்கும் நேற்று முதல் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் மழலையர் வகுப்புகள் முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் வெறிச்சோடின. மேலும் கொேரானா பீதியால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர ஆலோசனை

அதாவது ெகாரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, குழந்தை மற்றும் உடன் இருந்தவர்களின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் ரத்த மாதிரி முடிவு நேற்று வந்தது. அதில் அந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, குழந்தை மற்றும் நண்பர் ஆகிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாடகை கார் ஓட்டுனர்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. கடந்த மார்ச் 1-ந் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தெரியவந்தது.

அவருக்கு பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் இருந்த குடும்பத்தினர், விமானத்தில் வந்த சக பயணிகள், வாடகை கார் ஓட்டுனர் ஆகியோரை கண்டுபிடித்து தனிமைபடுத்தியுள்ளோம். அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த சோதனை முடிவு இன்று (நேற்று) வந்துள்ளது.

பீதி அடைய வேண்டாம்

இதில் அந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, குழந்தை மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை கொரோனா வைரசுக்கு 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பீதியடைய தேவை இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.

விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். ஊடகங்கள், இத்தகைய செய்திகளை மிகைப்படுத்தி கூற வேண்டாம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விஷயத்தை பொறுத்தவரையில் அரசு எதையும் மூடிமறைக்க விரும்பவில்லை. உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

700 படுக்கைகள்

எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில் 300 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வைரஸ் பரவுவதை தடுக்க மாநகராட்சி கமிஷனர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளன.

கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக 700 படுக்கைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் பதுக்குவது குறித்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் மருந்தகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய தேவை இல்லை. நோய் பாதித்தவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதுமானது.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Next Story