மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது - டி.எஸ்.பி.மகே‌‌ஷ் பேச்சு


மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது - டி.எஸ்.பி.மகே‌‌ஷ் பேச்சு
x
தினத்தந்தி 10 March 2020 10:15 PM GMT (Updated: 2020-03-11T06:04:04+05:30)

மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்று டி.எஸ்.பி. மகே‌‌ஷ் பேசினார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் இ.சுப்பிரமணியன், துணைத்தலைவர் எஸ்.மு‌‌ஷ்டாக்அகமது, பொருளாளர் வி.ஏழுமலை, தாளாளர் ஏ.பழனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ், பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ் பேசியதாவது:-

மாணவர்களுக்கு லட்சியம் முக்கியம். படிப்பும், விளையாட்டும் ஒருசேர பயிலவேண்டும். இந்த கல்லூரி ஒழுக்கம் நிறைந்த கல்லூரியாக உருவாக பாடுபட்ட கல்லூரி நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன். மாணவர்கள், இளைஞர்கள் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம் எடுத்து வாகனங்களை ஓட்டுங்கள். மாணவிகளை பொறுத்தவரை செல்போனை தவிர்ப்பது நல்லது. ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’, ‘டிக்டாக்’ போன்ற சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து காவல்துறைக்கு நிறைய புகார்கள் வருகின்றன. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள், இளம்பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. ஒவ்வொரு குற்றத்திற்கும் செல்போன் காரணமாக உள்ளது. பெற்றோர்களுக்கு உங்களால் ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படா வண்ணம் உங்களது நடத்தை இருக்கவேண்டும். அதேபோல் எக்காரணத்தை கொண்டும் போதை பழக்கத்துக்கு மாணவர்கள் யாரும் அடிமையாகி விடக்கூடாது. அது உங்கள் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் கே.பிரமோத்குமார், வி.வெங்கடேசன், டாக்டர் டி.குபேரன், இ.கே.டி.கிருபாலட்சுமி, வி.சத்தியநாராயணன், இ.சாந்தியம்மாள், டாக்டர் எஸ்.இம்தியாஸ்அகமது, ஏ.சதாம்உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர்.

Next Story