பழனி வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
கோடைகாலம் நெருங்குவதையொட்டி விலங்குகளின் தாகம் தீர்க்க பழனி வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பழனி,
பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், மூலிகைகள், விலையுயர்ந்த மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் இரை, தண்ணீருக்காக அடிக்கடி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள தோட்டம், குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக கோடைகாலத்தில் வனவிலங்குகள் பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதிக்கு தண்ணீர் தேடி வருவது வழக்கம்.
அப்போது அருகே உள்ள தோட்டங்களுக்குள் அவை நுழைந்து பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தடுப்பணை மற்றும் விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் தொட்டி கட்டப்பட்டு அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பழனி வனப்பகுதியில் கடும் வெயில் நிலவுவதால் வனத்தில் உள்ள நீரோடைகள் வற்றி வருகின்றன. எனவே வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை சார்பில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனச்சரகர் விஜயன் கூறுகையில், கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு வனவிலங்குகளின் தாகம் தீர்க்க பழனி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள வனச்சூழல் பூங்கா பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதற்காக டிராக்டர்களில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தொட்டிகளில் நிரப்பப்பட்டுள்ளது. இதேபோன்று 15 நாட்களுக்கு ஒருமுறை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.
Related Tags :
Next Story