விடிய, விடிய நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது


விடிய, விடிய நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 12 March 2020 4:30 AM IST (Updated: 12 March 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் விடிய, விடிய நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதே போல் குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டமானது 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நம்பிக்கையை பெற்ற தொழிற்சங்கங்களோடு பேச வேண்டும், குறைந்த பட்சம் 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வேலைப்பளு திணிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

2-வது நாள்...

இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப். மற்றும் பல தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காத்திருப்பு போராட்டமானது 2-வது நாளாக நேற்றும் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயகுமார் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை, கவுன்சில் செயலாளர் ஞானதாஸ், பேரவை துணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் கனகராஜ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டு பேசினர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

விடிய விடிய...

முன்னதாக நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய போராட்டமானது விடிய- விடிய நடந்தது.

இரவில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலையில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
1 More update

Next Story