கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது 3 மாதத்துக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார்

கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவரை 3 மாதத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
தானே மாவட்டம் பயந்தர் மேற்கு உத்தன் பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு முன்பு கொள்ளையன் ஒருவன் பூட்டை உடைத்து வங்கிக்குள் நுழைந்தான். பின்னர் அங்கு பணம், நகை வைக்கப்பட்டு இருந்த பண பெட்டகத்தை உடைக்க முயன்றான். அது முடியாமல் போனதால் ஆத்திரத்தில் வங்கியில் இருந்த கம்ப்யூட்டர் உள்பட மற்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றான்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், கொள்ளையனின் கையில் பச்சை குத்தப்பட்ட(டாட்டு) அடையாளம் இருந்ததை கண்டனர். மேலும் இந்த அடையாளத்தை வைத்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்தநிலையில் பயந்தர் மீன்பிடி படகில் உதவியாளராக வேலை பார்த்து வந்த ஒருவரின் கையில் அதே மாதிரியான பச்சை குத்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அந்த நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அவரது பெயர் கோட்பிரே டோம்னிக் (வயது38) என்பதும், அவர் தான் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் 3 மாதங்கள் கழித்து போலீசாரிடம் பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story