கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்கள்


கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்கள்
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-12T21:05:58+05:30)

துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்களாக கலெக்டர் உமா மகேஸ்வரி 4 மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். இந்த நியமனத்துக்கு தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து மாநில வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் அறிவுரைப்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்துவிட்டு 36 பேர் கொண்ட புதிய பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்ததை கண்டித்தும், புதிதாக அறிவிக்கப்பட்ட தற்காலிக துணை தாசில்தார் நியமன பட்டியலை ரத்து செய்யக்கோரியும் கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடந்த 10-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் 2 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இலுப்பூர், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் பணியாற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story