சாண எரிவாயு கலன் அமைக்க மானியம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


சாண எரிவாயு கலன் அமைக்க மானியம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 March 2020 3:15 AM IST (Updated: 12 March 2020 11:04 PM IST)
t-max-icont-min-icon

சாண எரிவாயு கலன் அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி மற்றும் விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, தேவத்தூர், கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இங்குள்ள விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் சாணத்தை விவசாயத்துக்கே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சாணத்தை அதற்கான உரக்கிடங்குகளில் கொட்டி வைத்துள்ளனர். இதில் நேரடியாக சூரிய ஒளி பட்டால் அதன் சத்துகள் ஆவியாகி விடும் என்று விவசாயத்துறையினர் கூறுகின்றனர். இதனால் சத்திரப்பட்டி பகுதிகளில் சாண எரிவாயு கூடம் அமைத்து பயன்படுத்தினால் வீட்டு எரிபொருள் மற்றும் விவசாயத்துக்கு நல்ல உரம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சாண எரிவாயு கலன் அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சத்திரப்பட்டியை சேர்ந்த விவசாயி செல்லமுத்து கூறியதாவது:-

கடந்த 1992-ம் ஆண்டு அரசு கூட்டுறவு சங்கம் மூலம் சாண எரிவாயு கலன் அமைக்க ரூ.10 ஆயிரத்தை மானியமாக விவசாயிகளுக்கு வழங்கியது. தங்கள் பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் செலவு செய்து மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் சாண எரிவாயு கலன் அமைத்தனர். இதன்மூலம் வெளியேறும் வாயுவை அடுப்பு எரிக்க பயன்படுத்தினோம். இது வெடிக்கும் தன்மையற்றது. மேலும் சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படுத்தாதது. நான் எனது தோட்டத்தில் சாண எரிவாயு கலன் அமைத்து பயன்படுத்தி வருகிறேன். இதில் கிடைக்கும் கழிவுகளை நேரடியாக விவசாயத்துக்கு உரமாக பயன்படுத்தலாம். தற்போதுள்ள விலைவாசி உயர்வால் எளிய, நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு சாண எரிவாயு கலன் அமைக்க மானியம் வழங்கி அரசு உதவ வேண்டும். இதன் மூலம் அவர்களின் எரிபொருள் செலவு மிச்சமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story