கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிப்பு டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம்


கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிப்பு டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம்
x
தினத்தந்தி 13 March 2020 12:00 AM GMT (Updated: 12 March 2020 8:21 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் தேங்கியதால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில்கள் அமைக்கப்பட்டு ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் மற்றும் பண்டிகை காலங்களில் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோன்று, உள்நாட்டிலும் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால் மக்கள் கூடும் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்தவுடன் ஈஸ்டர் பண்டிகை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

கொரோனா வைரஸ்

இதில், ரோஜாமலர்களின் விற்பனை சிறப்பான முறையில் இருக்கும் என்று எதிர்பார்த்த மலர் விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா வைரஸ் தாக்கம் பீதியால், ஓசூர் பகுதியில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் உள்நாட்டு ரோஜா மலர்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ரோஜா, ஜெர்பரா போன்ற மலர்கள் தோட்டங்களில் பறிக்கப்படாமல் காய்ந்து கருகி வருகின்றன. இந்த மலர்களுக்கு வரவேற்பு இல்லாததால் கொய்மலர்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. விழா காலங்களின்போது 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா மலர்கள் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.

டன் கணக்கில் தேக்கம்

ஆனால், தற்போது 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, 10 மலர்கள் கொண்ட ஜெர்பரா ஒரு கட்டு, 100 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக சோகமடைந்துள்ள மலர் சாகுபடியாளர்கள் கொய்மலர்களை பறிக்காமல் தோட்டங்களில் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் டன் கணக்கில் மலர்கள் தேங்கி கிடந்து, குப்பை தொட்டியில் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story