காட்டுமன்னார்கோவில் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவர் கைது


காட்டுமன்னார்கோவில் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 12:03 AM GMT)

காட்டுமன்னார்கோவில் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி சிங்கார வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹாலித். இவருடைய மகன் சல்மான் பாரீஸ் (வயது 42). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜனிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், லால்பேட்டை மிளாதெருவை சேர்ந்த சிபகத்துல்லா மகன் நியாஜ் அகமது (42) என்பவர் என்னிடம் ஏலக்காய், பருப்பு, வாசனை திரவியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், அதில் பங்குதாரரானால் லாபத்தில் பங்கு தருகிறேன் என்று கூறி கடந்த 13.2.2017 முதல் 2019-ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.47½ லட்சம் வாங்கினார்.

ஆனால் அவர் கூறியபடி லாபத்தில் பங்கும் தரவில்லை, நான் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து அந்த பணத்தை நியாஜ் அகமதுவின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, பணத்தை தர முடியாது என்று திட்டினார். அவருடைய மனைவி பாத்திமா முபிளா, சகோதரி பர்வீன் ஆகியோரும் என்னை ஆபாசமாக பேசினர். மேலும் பணத்தை தராமல் ஏமாற்றி, மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, நான் கொடுத்த ரூ.47½ லட்சத்தை வாங்கித்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்ற வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், அதை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சல்மான் பாரீசிடம் நியாஜ் அகமது ரூ.47½ லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நெய்வேலி மந்தாரக்குப்பம் மசூதி அருகில் பதுங்கி இருந்த நியாஜ் அகமதுவை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். கைதான நியாஜ் அகமது 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.6 கோடிக்கு மேல் இதேபோல் கூறி மோசடி செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story