இந்த ஆண்டு முதல் சின்னசேலம் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்


இந்த ஆண்டு முதல் சின்னசேலம் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும்  பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
x
தினத்தந்தி 13 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-13T21:16:56+05:30)

இந்த ஆண்டு முதல் சின்னசேலம் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

நெல்லை, 

இந்த ஆண்டு முதல் சின்னசேலம் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதிய மருத்துவக்கல்லூரி 

தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை ஆகிய 4 இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. தற்போது சின்னசேலம் தலைவாசல் பகுதியில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அங்கு ரூ.82 கோடி நிதி மூலம் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு முதல் அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும். முதலாம் ஆண்டு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த ஆண்டு நடக்கும் கவுன்சிலிங்கில் இந்த புதிய கல்லூரி பெயர் இடம்பெறும். இதன் மூலம் தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 400 ஆக உயரும்.

தொழில் முனைவோர் பயிற்சி 

தமிழ்நாட்டில் படிக்கும் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தற்போது மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி பல்கலைக்கழக மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்டினங்கள், உயர்தர மாட்டினங்கள், கறவை பசுக்கள், கோழிப்பண்ணைகள், வன விலங்குகள் உள்ளிட்ட கால்நடைகளை வைத்து எப்படி தொழில் செய்து? என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி 4–ம் ஆண்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி ஆண்டு விழா 

முன்னதாக அவர் நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆண்டு விழா மற்றும் விடுதிநாள் விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். விடுதி காப்பாளர் முத்துகிருஷ்ணன் விடுதி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர் குழுவின் தலைவர் எட்வின் வரவேற்றார். மாணவர் கோகுல் நன்றி கூறினார்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் பைஜூ, பேராசிரியர்கள் டாக்டர் செந்தில், இனிகோ மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story