கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது கலெக்டர் எஸ்.சிவராசு அறிவுரை


கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது கலெக்டர் எஸ்.சிவராசு அறிவுரை
x
தினத்தந்தி 14 March 2020 4:31 AM IST (Updated: 14 March 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்ககம், சட்டக்கல்லூரி தேசிய தொழில் நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்்சித் திட்டம் ஆகிய துறைகளுடன் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பேசும்போது கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவ, மாணவிகள் கைகளை சோப்பு மூலம் கழுவ வேண்டும் என மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதையும், நீட் தேர்விற்காக வகுப்புகள் நடத்துவதையும், பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் இருமும் போதும், தும்மும் போதும் ஏற்படுகின்ற நீர்்த்திவலைகள் மூலம் பரவும் தன்மை கொண்டதாகும். சளி, இருமல், உடல் சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறியாகும். மாணவ, மாணவிகள் இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கைகளை தினமும் கிருமி நாசினி கொண்டு 10 முதல் 15 முறை சுத்தம் செய்ய வேண்டும். கைகள் சுத்தமாக இருந்தாலும் கிருமி நாசினி கொண்டு கழுவி சுத்தம் செய்தல் வேண்டும். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதனை தவிர்க்க வேண்டும். விளையாட்டிற்கு பின் கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் விளையாடும் போது பயன்படுத்திய பொருட்களையும் நன்கு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.

பொது இடங்களில் உமிழ்தல், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களது கண், மூக்கு மற்றும் வாய்களை தொடுவதனை தவிர்க்க வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளையோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அணுக வேண்டும். காய்ச்சல் நேரங்களில் இளநீர், ஓ.ஆர்.எஸ்., கஞ்சி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவினை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

கிருமிநாசினி கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள தரைகள், படிகள் மற்றும் மாடிப்படி கைப்பிடிகள் போன்றவைகளை தினமும் சுத்தம் செய்தல் வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் பேருந்துகளை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கைப்பிடி போன்ற இடங்களை தினமும் சுத்தம் செய்தல் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
1 More update

Next Story