பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது திண்டுக்கல் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது திண்டுக்கல் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 15 March 2020 4:26 AM IST (Updated: 15 March 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் பூத கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது என்று திண்டுக்கல்லில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் ரூ.327 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.14.02 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் ரூ.63.54 கோடி மதிப்பில் 25 ஆயிரத்து 213 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். மேலும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆரால் கடந்த 1985-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. குளிரில் ஆடிய மயிலுக்கு பட்டு பீதாம்பரத்தை போர்த்திய பேகன், சுதந்திர போராட்ட வீரர்கள் கோபால்நாயக்கர், சுப்பிரமணியசிவா உள்ளிட்டோர் பிறந்த ஊர் இது. இதனால் வீரமும், தியாகமும் நிறைந்த பூமியாக திகழ்கிறது.

அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையோடு உள்ளது. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்ற ஒரே அரசு, அ.தி.மு.க. அரசு தான். திண்டுக்கல்லில் ரூ.327 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. இந்த கல்லூரி 2021-2022-ம் கல்வி ஆண்டில் 150 மாணவர்களுடன் செயல்பட தொடங்கும்.

இந்த கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக முதல்கட்டமாக ரூ.100 கோடி உடனடியாக ஒதுக்கப்பட்டது. மக்களின் உடல்நலத்தை பேணுவதற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துகிறோம். மேலும் நோய் கட்டுப்பாடு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. தாய்-சேய் நலத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.2 ஆயிரத்து 857 கோடியில் சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்காக 5 முறை தமிழக அரசு விருது பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் போடிகாமன்வாடி வாலிபர் நாராயணசாமி விபத்தில் 2 கைகளை இழந்தார். அவருக்கு இறந்தவரின் கைகளை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்-அமைச்சராக நான் பதவி ஏற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு, தமிழ்நாடு முழுவதும் பொய் பிரசாரம் செய்கின்றனர். அ.தி.மு.க. அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று கேட்கிறார்கள். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் செய்த பணிகளில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

குடிமராமத்து திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 78 பணிகள் ரூ.44 கோடியில் நடைபெற்றுள்ளன. மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கான அந்த திட்டத்தையும் கூட மு.க.ஸ்டாலின் குறைகூறுகிறார்.

அ.தி.மு.க. அரசில் ஏதாவது குறை இருக்குமா, என்று பூதக்கண்ணாடியை கொண்டு தேடிதேடி பார்க்கிறார். எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறைகளை பார்க்க முடியாது. ஏராளமான நிறைகள் தான் உள்ளன. அதை தான் பார்க்க முடியும். ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை வைத்தும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்து விடுவார்.

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், அதிகாரிகள் நேரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கின்றனர். இதில் மொத்தம் 9 லட்சத்து 77 ஆயிரத்து 670 பேரிடம் மனு பெறப்பட்டது. அதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 660 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,612 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 3 மாதத்தில் 2½ லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான கல்வி கிடைப்பதற்காக தொலைநோக்கு சிந்தனையோடு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதில் திண்டுக்கல்லில் 35 ஆயிரம் பேருக்கும், மாநிலம் முழுவதும் 51 லட்சத்து 67 ஆயிரத்து 19 பேருக்கும் ரூ.7 ஆயிரத்து 241 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நீதிமன்றம் சென்றார்கள். எனினும், அனைவருக்கும் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 வழங்கப்பட்டது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அ.தி.மு.க. வின் அரசு, தொடர்ந்து அதை செய்து வருகிறது. ஆனால், இந்த நலத்திட்டங்கள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றன. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள பழனி நவீனப்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.58 கோடி ஒதுக்கப்பட்டு சாலை, சாக்கடை, மின்விளக்கு உள்பட அடிப்படை வசதிகள், குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடக் கின்றன. இதன்மூலம் திருப்பதி போன்ற அனைத்து வசதிகளுடன் பழனி முருகன் கோவிலும் மாற்றப்படும்.

வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது அ.தி.மு.க. அரசு மட்டும் தான். அதன்படி ரூ.2 ஆயிரத்து 847 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிர்காப்பீடு இழப்பீடாக ரூ.7 ஆயிரத்து 702 கோடி வழங்கப்பட்டது. மக்காச்சோள பயிர்களை தாக்கும் அமெரிக்க படைப்புழுக்களை ஒழிக்க அரசு சார்பில் ரூ.47 கோடியே 60 லட்சம் செலவில் மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.186 கோடியே 25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. இதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை முன்பு 34 சதவீதமாக இருந்தது. ஜெயலலிதா வழியில் தொடர்ந்து கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 49.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு வரை மருத்துவ படிப்பு சேர்க்கை ஆண்டுக்கு 1,945 ஆக இருந்தது. அதன்பின்னர் 6 மருத்துவ கல்லூரிகளை புதிதாக கொண்டு வந்ததால், கூடுதலாக 855 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின்னர் கூடுதலாக 350 இடங்களை பெற்றோம். தற்போது புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதன் மூலம் 1,650 பேர் கூடுதலாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் 1½ ஆண்டுகளில் 2 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளோம். அரசு மருத்துவ கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படித்த மருத்துவர்கள், சேவை மனப்பான்மையோடு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்ய வேண்டும்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு இணையாக ஸ்கேன் கருவிகள், டயாலிசிஸ் கருவிகள், புற்றுநோய் கண்டறியும் கருவிகள் என வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். கிராமப்புற மக்கள் அங்கேயே சிகிச்சை பெறுவதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படுகிறது.

இதனால் 70 சதவீத பிரசவம் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் இலவசமாக அனைத்து சிகிச்சைகளும் பெறும் நிலையை உருவாக்கி உள்ளோம். அதேபோல் மருத்துவத்துறையில் 90 சதவீத பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதுபோன்ற முத்து, முத்தான திட்டங்களை கொண்டு வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சியினர் எதுவும் நடக்கவில்லை என்று பச்சை பொய்யை கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அடித்தளமிட்ட மாவட்டம் திண்டுக்கல். எம்.ஜி.ஆரின் செல்வாக்கை தமிழகம் நிரூபித்த மாவட்டமும் இது தான். தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எப்போதும் மக்களின் நலனை பாதுகாக்கும் அரசாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்து விட்டார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் பரவுகிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். வெளியே சென்று வீட்டுக்கு செல்லும் போது கைகள், கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜு, கடம்பூர் ராஜு, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், கே.சி. கருப்பணன், துரைக்கண்ணு, சேவூர் ராமச்சந்திரன், வளர்மதி, சட்டசபை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் எம்.பி.க்கள் தம்பித்துரை, உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் தேன்மொழி, பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story