கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது


கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 March 2020 5:30 AM IST (Updated: 17 March 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணியனூர், சிவசக்தி நகர், கே.பி.கரடு வடபுறம், காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள 5 கோவில்களில் கடந்த 13-ந் தேதி இரவு அடுத்தடுத்து உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர். இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸ் துணை கமி‌‌ஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி கமி‌‌ஷனர் பூபதிராஜன் தலைமையில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோவில்களில் உண்டியலை உடைத்து திருடிய கும்பலை தேடி வந்தனர்.

இந்தநிலையில், கோவில்கள் மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 7 பேர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

7 வாலிபர்கள் கைது

இதையடுத்து சேலம் செவ்வாய்பேட்டை எஸ்.எம்.சி.லைன் மற்றும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி (வயது 21), செல்லப்பா (23), தனு‌‌ஷ் (21), அருள்குமரன் (19), கதிரேசன் (19), நந்தகுமார் (23), விமல்குமார் (20) ஆகிய 7 வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம், 2 குத்துவிளக்குகள், அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் துணை கமி‌‌ஷனர் செந்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து சில கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடந்தது. தற்போது அன்னதானப்பட்டி பகுதியில் 5 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கொண்டலாம்பட்டி, இரும்பாலை, வீராணம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் திருடிய மற்றொரு கும்பலை விரைவில் கைது செய்துவிடுவோம். இவர்கள், அன்றாட செலவு, மது குடிப்பதற்காக இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை கும்பல்

இதுதவிர, வெளி மாநிலத்தை சேர்ந்த ஒரு கொள்ளை கும்பல் சேலத்திற்குள் நுழைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்த கும்பல் ஏற்கனவே பெரிய அளவில் சேலத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்தவர்களாக இருக்கலாம். அவர்களை கூண்டோடு பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story